news-and-events

News

வளரும் குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான பிரச்சனை உடல் பருமன்! பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் விழிப்புணர்வு ஓவியப் போட்டி

வளரும் குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான பிரச்சனை உடல் பருமன்! பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் விழிப்புணர்வு ஓவியப் போட்டி

உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பி.எஸ்.ஜி பல்நோக்கு மருத்துவமனையில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   இதில், உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை வளரும் பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக, ‘உடல் பருமனை எதிர்த்து போராடுவோம்’ மற்றும் ‘ஆரோக்கியமான உணவு முறை’ என்ற தலைப்புகளில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர். இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: உடல் பருமன் பெரியோர்களை மட்டுமில்லாமல் வளரும் குழந்தைகளையும் பாதிக்கும் ஆபத்தான பிரச்சனையாகும். நமது நாட்டில் இது நீண்ட நாளாகவே சிக்கலான பிரச்சனையாக உள்ளது. உடல் பருமனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சமாளிக்க உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் செயல்படுவதாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் இந்த துறையை நாடி சிகிச்சைகள் எடுத்து கொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த ஓவியங்களை பி.எஸ்.ஜி மருத்துவமனை முதன்மை உணவியல் ஆலோசகர் கவிதா மற்றும் சமூக மருத்துவத் துறையை சார்ந்த ஓவியர் சோமேஸ்வரன் ஆகியோர் மதிப்பீடு செய்து சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக பிரபல யூ டியூபர் சுதீர் ரவீந்திரநாதன், மாற்றுத்திறனாளிகள் பிசியோதெரபிஸ்ட் திட்ட அலுவலர் மதனகோபால், ரூபி மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வரும், கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் சங்க பொருளாளர் கற்பக ஜோதி ஆகியோர் சிறந்த ஓவியங்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு முறை குறித்து ஆலோசனைகளை பி.எஸ். ஜி மருத்துவமனையின் உணவியல் துறையை சார்ந்த முதுநிலை உணவியல் ஆலோசகர் கார்த்திகா பெற்றோர்களிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

Copyrights © 2025 PSG Hospitals. All Rights Reserved.